மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தீவிரவாதிகளை ஒப்படைக்காவிட்டால் போர் தொடுப்போம் என மிரட்டியதாக பாகிஸ்தானில் வதந்தி கிளம்பியது. இதற்கு பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவன் சயீத், மெளலானா மசூத் ஆசார் உள்ளிட்ட 20 தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை அமெரி்காவும் ஒரு பக்கம் நெருக்கி வருகிறது.
இந்த நிலையில், நேற்று பிரணாப் முகர்ஜி, சர்தாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு போர் தொடுப்போம் என மிரட்டியதாக பாகிஸ்தானில் செய்தி பரவியது. ஆனால் இது அப்பட்டமான வதந்தி, திசை திருப்பும் செயல் என மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை திசை திருப்ப, குழப்பம் விளைவிக்க பாகிஸ்தான் முயலுகிறது. அதுதான் இந்த மிரட்டல் தொலைபேசித் தகவல்.
கடந்த மே மாதம்தான் நான் சர்தாரியுடன் கடைசியாகப் பேசினேன். அதேபோல அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷியுடன் பேசினேன். அவ்வளவுதான்.
சர்தாரியை நான் மிரட்டினேன் என்ற வதந்தி வெளியானவுடனேயே உரியவர்களுக்கு அதை விளக்கி விட்டோம். பாகிஸ்தான் நிர்வாகத்திற்கும் விளக்கி விட்டோம். அப்படி ஒரு போனே நான் செய்யவில்லை என்பதை உரியவர்களுக்குத் தெரிவித்து விட்டோம்.
இப்படி ஒரு வதந்தியை பாகிஸ்தான் அரசு நம்பி விட்டதாக அறிந்து நான் கவலை அடைந்தேன். எதிர்காலத்தில், இப்படிப்பட்ட தவறான தொலைபேசி அழைப்புகளை நம்பி பாகிஸ்தான் அரசு எதிர்காலத்தில் தவறுதலான நடவடிக்கைகளை எடுக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மேலும் இந்தியா மிரட்டுகிறது என்று மக்களை குழப்பவும், பதட்டத்தை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் முயலுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி.
முன்னதாக பிரணாப் முகர்ஜி பேசியதாக கூறி வந்த தொலைபேசி அழைப்பை சரியாக உறுதி செய்து கொள்ளாமல் பாகிஸ்தான் அதிகாரிகள், அதிபர் சர்தாரிக்கு கொடுத்து விட்டதாக தெரிகிறது. அதில் பேசிய நபர் சர்தாரியையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. அதே நபர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸிடமும் பேச முயன்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பிரணாப் முகர்ஜி மிரட்டியதாக வந்த தகவலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளப் போவதாகவும் வேகமாக செய்திகள் பரவியதால் நேற்று பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பில் ஆழ்ந்தது.
No comments:
Post a Comment