புதுச்சேரி : புதுச்சேரி அருகே குயிலாப்பாளையம் பகுதியில் காணும் பொங்கலையொட்டி நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில், தமிழகத்தின் பாரம்பரிய உடையில் வெளிநாட்டவர்கள் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கல் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. புதுச்சேரிக்கு அருகில் வெளிநாட்டவர் அதிகம் வாழும் ஆரோவிலை அடுத்த குயிலாப்பாளையம் மந்தவெளி திடலில், காணும் பொங்கலை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடந்தது. ஆரோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளை சீவி, அவற்றிற்கு அழகிய வண்ணங்கள் தீட்டி, பலூன் கட்டி மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்தனர். மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் மாடுகள் சீறிப் பாய்ந்த போது, தங்களது நிலத்தில் விளைந்த மா, புளி, வாழை போன்ற விளைபொருட்களை, சூறை விட்டு மகிழ்ந்தனர். ஆரோவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள், தமிழகத்தின் பாரம்பரிய உடையான புடவை, தாவணி அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்கள், கரும்பு, பொங்கல் வழங்கி, காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். மஞ்சு விரட்டு நிகழ்ச்சியையொட்டி குயிலாப்பாளையத்தில் சந்தை நடந்தது. அதில், மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியையொட்டி டி.எஸ்.பி., உதயகுமார், இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment