சென்னை: உலக அளவில் பொருளாதாரமும், அறிவுத் திறனும் வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவை சிறு வயதில் இருந்தே புகட்டப் பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநில கவுன்சில் மற்றும் வேல்ஸ் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து, 18வது தேசிய சிறார் குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சியை ஐந்து நாட்களுக்கு நடத்துகின்றன. இதன் துவக்க விழா சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில், நேற்று நடந்தது. தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநில கவுன்சில் உறுப்பினர் செயலர் வின்சென்ட் வரவேற்றார். பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார். அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்து.
முதல்வர் கருணாநிதி பேசியதாவது: பத்து முதல் 17 வயதுள்ள குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக் கொண்டு வரும் வகையில், இந்த கண்காட்சி அமைந்துள்ளது. குழந்தைகள் தங்கள் படிப்பில் மட்டுமல்லாமல் சமுதாய பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதற்கு இது போன்ற கண்காட்சிகள் ஒரு வாய்ப்பாக அமையும். அறிவியல் மாநாட்டு "நில வளம் - வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காக பாதுகாப்போம்' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. ஒரு நாட்டின் வளத்திற்கு நிலமும், நீரும் மிக முக்கியமானது. இன்றைய நிலையில் இவை இரண்டும் மிக நெருக்கடியான நிலையில் தான் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, தான் தமிழகத்தில் விவசாயத்தில் நவீன முறையை கையாண்டு உற்பத்தியை அதிகரித்துள்ளோம். ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதால், நிலத்தின் பயன்பாடு அதிகம் பாதிக்கிறது. நிலத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 1.3 கோடி எக்டர் நிலப் பரப்பில், 2.8 சதவீதம் மட்டுமே விளை நிலமாக உள்ளது. சுற்றுச் சூழலையும், நிலப் பரப்பினையும் பாதுகாக்கும் வகையில், ஜப்பான் வங்கியுடன் இணைந்து தமிழகத்தில் 686 கோடி ரூபாய் மதிப்பில் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதாரமும், அறிவுத் திறனும் வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவை சிறு வயதில் இருந்தே புகட்டப் பட வேண்டும். அதற்கு இந்த கண்காட்சி ஒரு வரப் பிரசாதமாக அமையும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
மாநாட்டில் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, பொன்முடி, தங்கம் தென்னரசு, அன்பரசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக அறிவியல் இயக்க தலைவர் கிருஷ்ணசாமி, வேல்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் மற்றும், தமிழகம், அருணாசல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மாநாட்டில் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment