Sunday, December 7, 2008

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பணிந்துள்ளது

Mumbai terror attack in taj Hotel
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பணிந்துள்ளது. இன்னும் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக அது அறிவித்துள்ளது.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் முழுக்க முழுக்க பாகிஸ்தானியர்களே ஈடுபட்டுள்ளதற்கு போதுமான ஆதாரங்களை இந்தியாவும், அமெரிக்காவும் திரட்டியுள்ளன.

இதைக் காட்டி லஷ்கர் இ தொய்பா தலைவர் உள்ளிட்ட சிலரைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வந்தது. இதே கோரிக்கையை அமெரிக்காவும் வைத்தது.

மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை அமெரிக்காவின் நெருக்குதல் அதிகமாகவே இருந்தது. அமெரிக்க ராணுவ துணைத் தளபதி முல்லன் இஸ்லாமாபாத் சென்று லஷ்கரின் தொடர்புகள், ஐ.எஸ்.ஐயின் தொடர்புகளை தெரிவித்து, ஆதாரங்களை விளக்கி இனியும் மறுக்க முடியாது என பாகிஸ்தானுக்கு கிடுக்கிப் பிடி போட்டார்.



இதையடுத்து பாகிஸ்தானிய தொடர்பை அந்த நாட்டு அரசு ஒத்துக் கொண்டது.

ரைஸ் விட்ட மிரட்டல்

மேலும், பாகிஸ்தான சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ், லஷ்கர் இ தொய்பா தலைவர் சயீத் உள்ளிட்டோரைக் கைது செய்ய வேண்டும். இந்தியா கேட்கும் சிலரை அவர்களிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும்.

பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை உறுதியுடனும், வேகத்துடனும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கும் என எச்சரித்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதனால் வேறு வழியில்லாத பாகிஸ்தான் நெருக்குதலுக்குப் பணிந்துள்ளது. யாரையும் கைது செய்ய மாட்டோம் எனக் கூறி வந்த பாகிஸ்தான் தற்போது 48 மணி நேரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரைஸிடம் பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அதிபர் சர்தாரி ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது இந்தியா கோரியுள்ள நபர்கள் குறித்து அவர் விவாதிக்கவுள்ளார்.

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த யூசுப் முஸ்ஸமில் மற்றும் இந்தியா கோரும் பிறரை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ரைஸ் வலியுறுத்தியுள்ளாராம்.

அப்போது பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தலையிடுகிறது, ஆப்கன் எல்லையில் இந்தியா நிலையற்ற தன்மையை உருவாக்க முயல்கிறது என்று பாகிஸ்தான் தரப்பில் ரைஸிடம் குறை கூறப்பட்டதாம். ஆனால் அந்தக் கதைகளை எல்லாம் ரைஸ் கேட்க தயாராகவே இல்லையாம்.

தீவிரவாதிகளின் பட்டியலைக் கொடுத்து இவர்களை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று மட்டும் ரைஸ் கறாராக கூறி விட்டாராம்.

முஸ்ஸமில் தவிர லஷ்கர் இ தொய்பாவின் நிறுவனர்களில் ஒருவரான ஜாகி உர் ரஹ்மான் லக்வி, முன்னாள் ஐ.எஸ்.ஐ. இயக்குநர் ஹமீத் குல் ஆகியோரையும் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: